Friday, October 3, 2008

பனிக்கட்டியாறு

எனக்கு வசப்படுகிற மொழியினால் உங்களை நிறைக்க இந்த ஆற்றினை ஓடவிடுகிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயணியுடன் அழகிய ஓடமொன்று அதில் மிதந்து வரும். ஓடம் சுமந்துவருகின்ற பயணி சில வேளை நீங்களாகவும் இருக்கக்கூடும். ஆனால், ஆளில்லாமல் வந்தால் அவசரப்பட்டு யாரும் ஏறிவிட வேண்டாம். ஏனெனில், பயணித் தெரிவையும் படகின் போக்கையும் ஆறே தீர்மானிக்கிறது. உருகியோடும் ஆற்றில், மிதந்துசெல்லும் ஓடத்தில் உட்கார்ந்திருக்கும் பயணி உங்களுக்கானவர். ஆற்றின் மருங்குகளில் காத்திருக்கும் உங்களுக்காய், பயணியும் ஓடமும்; பல சுவாரஸ்யங்களை வழங்கிச் செல்லலாம். அழகை ரசிப்பதும் பயனை உணர்வதும் அவரவர் விருப்பம். ஆனால், என்னாற்றுப் பனிக்கட்டிகளை அகழ்ந்து சென்று உங்களுடைய ஆறுகளைக் குளிரவைக்கக்; கூடாது. ஆற்றின் ஓட்டத்திலோ, ஓடத்தின் ஆட்டத்திலோ ஏதேனும் குறை கண்டால் அல்லது கரையோரக் கட்டுகளில் பலவீனம் கண்டால் தயங்காமல் தெரிவியுங்கள்.
“சார், சமீபத்தில நீங்க பார்த்து ரசிச்ச திரைப்படம் எதுன்னு கேக்கிறாங்க” – சுஜாதாவின் அலுவலகத்தினுள் நுழைந்தபோது அங்கு கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த யுவதியொருவர் சுஜாதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். குமுதத்திற்கான கேள்வி-பதில் பகுதி அது. இன்னொரு யுவதியும் இரண்டு இளைஞர்களும் கூட wஎவ்வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காகப் போடப்பட்டிருந்த கதிரையொன்றில் வழமைபோலவே மிடுக்காகக் கூனி அமர்ந்திருந்த சுஜாதா, “ரசிக்கும்படியான படம் எதுவும் சமீபத்தில வரல்ல” என்று பதில் சொன்னார். என்னையும் “வாங்க” என்று தனக்கருகிலிருந்த கதிரையைக் காட்டினார், அவர் வரவேற்ற விதத்தில் எனக்குத் திருப்தி இருக்கவில்லை. என்னுடைய 20 நிமிட நேர தாமதம் காரணமாக இருந்திருக்கலாம். நுங்கம்பாக்கம் சவப்பெட்டிக்கடைக்கு முன்னால் ஆட்டோ மக்கர் பண்ணி நின்றுவிட்டது என்கிற காரணத்தைச் சொல்லத் தோன்றவில்லை. பதிலளிப்பு தொடர்ந்துகொண்டேயிருந்தது. இங்கே தட்டச்சுக்காரி எனக்குச் சந்தர்ப்பம் தரவில்லை என்று நான் சொல்லக்கூடாது. ஆனால், சுஜாதா என்னை சட்டை பண்ணாமல் பதிலளித்துக்கொண்டிருந்தார் எனலாம். அன்று 12 மணிக்கு எனக்குப் பரீட்சை இருந்தது. சுஜாதா குறிப்பிட்ட ஒன்பது மணிக்குச் சரியாகச் சென்றிருந்;தால், “நான் அவசரமாகப் போக வேண்டும், பேட்டியை ஆரம்பிப்போமா” என்று கேட்டுத் தொடங்கியிருக்கலாம். அதுவரை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்த நான், சற்றே அசைந்தேன். கால் மேல் கால் போட்டு வசதியாக உட்காரவும் செய்தேன்: சுஜாதாவைப் போலவே. என்ன நினைத்தாரோ, “நீங்க பேட்டியை ஆரம்பிக்கலாம்” என்றார். என்னுடைய கேள்விகளுக்கும் குமுதக் கேள்விகளுக்கும் மாறி மாறிப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், நான் கேட்ட மூன்றாவது கேள்விக்கு, அவர் இலக்கியத்தினுள் நுழைந்து பதில்சொல்ல வேண்டியிருந்தது. பல நொடிகள் மௌனித்தார். “எங்கே படிக்கிறீங்க?” என்று கேட்டார். “இந்தக் கேள்வியை விட்டுடுங்க” என்றார். இப்படி நான் கேட்டு அவர் தவிர்த்த கேள்விகள் மூன்று. அவை அவருக்கு மட்டுமே பொருத்தமானதுமான கேள்விகள் என்பதால், வேறெவரிடமும் கேட்கப்படாமல் அவை இன்னமும் என்னுள் இருக்கின்றன. (இதிலிருந்து, சுஜாதாவுக்கு இலக்கிய அறிவு இல்லை என்று நான் சொல்ல வந்ததாய்ப்; பொருள்கொள்ள வேண்டாம்). மிகச் சாதாரணமான, சுவாரஸ்யங்கள் மிகுதிப்பட பதிலளிக்கக்கூடிய, மற்றெவரையும் தாக்கத்தேவையில்லாத அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதொன்றும் சிரமமில்லை என்றுதான் இன்றும் நினைக்கிறேன். ஆனால், ஏன் தவிர்த்தார் என்பதற்குத்தான் காரணம்; தெரியவில்லை. அடுத்துத் தொடர்ந்;த என்னுடைய கேள்விகள் தட்டச்சுக்காரிக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்தன. தவிரவும் அங்கிருந்த இளுசுகளெல்;லாமும் வேலையை நிறுத்தி எம்பக்கம் திரும்பி உட்கார்ந்தனர்.சுமார் 35 நிமிடங்கள் தொடர்ந்த உரையாடலில், பேட்டிக்குத் தேவையற்ற பல சிறந்த நகைச்சுவைகள் இருந்தன. ஆறுபேரும் சேர்ந்து சிரித்ததில் அடுத்த பகுதியாட்கள் அதிர்ந்திருக்கக்கூடும். ஆனால் யாருமே வேடிக்கை பார்க்க வரவில்லை. முடிவில் கேட்டேன், பேட்டி திருப்தியாக இருக்கிறதா என்று. “ரொம்ப நல்லாவே கேட்டிருக்கிறாய். இங்கே பேட்டியெடுக்க வர்றவங்க எப்பிடின்னா, என்னைப்பற்றி என்னையே கேட்டுட்டு ஆரம்பிப்பாங்க. நீ மாறாக இருக்கிறாய். திண்னைக்கு எழுதுற லதா நீ தானா?” என்று கேட்ட சுஜாதாவின் முகத்தில் நிறைந்த மகிழ்ச்சி இருந்தது. “இல்லை, அவங்க சிங்கப்பூரில் இருக்கிற கனகலதா என்றேன். “நீ கதை, கவிதையெல்லாம் கூட எழுதுவாயா? எழுதினா அனுப்பிவை. நான் ப்றூஃப் பாத்து அனுப்பறேன்” என்றார். அவர் என்னை வரவேற்ற முறையில் கண்ட அதிருப்தி, வழியனுப்பிய முறையில்; திருப்தியானது. ஆனால், அந்தப் பேட்டியினைக் காத்திரப்படுத்தியிருக்க வேண்டிய பல கேள்விகளுக்கு சுஜாதா பதில் சொல்லாமல் விட்டது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தினைத் தந்தது. தவிரவும், அவற்றினை ஈடுசெய்யும்படியாக என்னிடமும் கேள்விகளில்லாமல் போனது தவறுதான்!
உருகியோடும்.