Friday, January 14, 2011

தற்காலிகப் புகலிடத்தில் நிரந்தரமாக வாழ முடிவு!

ராஜா மகள்

வன்னிவாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையை எடுத்துச்சொல்ல எந்தவொரு  வார்த்தையிலிருந்து இக்கட்டுரையை ஆரம்பித்தாலும் இறுதியில் அழுகையில் முடிவதைத் தவிர்க்க முடியாது. ஒட்டுமொத்த உலகிலும்; நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற மனித அவலங்களின் வகையறாக்களைப் பட்டியலிடுவதாயின், அளக்க முடியாத அதன் நீளத்தின் இறுதி வரைக்கும் இன்று இவர்கள் படுகிற இன்னல்கள் இடம்பிடிக்கும்.

கேட்பதற்குச் சற்றே ஆச்சரியம் தருகிற விடயமானாலும்கூட நம்பியாக வேண்டிய நிஜம் இது! போரினால் நிர்க்கதியான மக்கள் பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் தங்கவைக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெயிலிலும் மழையிலும் அவர்கள் அல்லாடிய நிலை தொடர் சர்ச்சைக்குள்ளாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. “எங்களை எங்கள் இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள்” என்கிற கோரிக்கையை மட்டும் மக்கள் துணிச்சலாக அரசாங்கத்திடமும் ஐரோப்பிய மற்றும் அண்டை நாடுகளிலிலிருந்து வந்துபோவோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போது குறித்த சில முகாம் மக்களுக்கு மட்டும் அதற்கு வழி பிறந்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற விரும்பவில்லை. எந்த முகாம் வாழ்க்கை வேண்டாம் என்று முன்பு அழுதார்களோ, இப்போது “அதுவே பரவாயில்லை, நாங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை” என்கிற மனோ நிலைக்கு இலங்கை அரசாங்கம் அவர்களைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதற்கான தலையாய காரணங்களைப் பட்டியலிடுவதோடு பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் மக்கள் படுகிற இன்னல்களையும் ஆராய்கிற இக்கட்டுரையை முழுவதுமாகப் படிப்பீர்களானால் பெரியதொரு சம்மட்டி கொண்டு உச்சந்தலையில் யாரோ அடிப்பதாய் உணர்வீர்கள்
.
1. இராணுவம் நிகழ்த்துகிற பாலியல் வன்புணர்வும் கொலையும்

வன்னியில் அரை கிலோ மீற்றருக்கு ஒரு காவலரண் அமைத்துத் தங்கியிருக்கிற இராணுவத்தின் பொழுதுபோக்கு, ஆண்கள் இல்லாத குடும்பங்களிலுள்ள பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துதலாகும். யாழ் அரசினர் வைத்தியசாலை உட்பட வட்டக்கச்சி துணுக்காய் போன்ற இடங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலைசெய்யப்பட்ட, தற்போது வரையில் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கிற சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். போர் நடந்தேறிய வன்னியின் பெரும்பாலான இடங்களில் முன்பு போன்று மக்கள் அடர்த்தியாக இல்லை. ஏக்கர் அளவில் விஸ்தீரணம் கொண்ட குடியிருப்பு நிலங்கள் தற்போது மயானம் போன்றுதான் காட்சியளிக்கிறது. அண்டை அயலாருக்குப் பதிலாக சீருடை அணிந்த இராணுவத்தை மட்டுமே பார்க்க முடிகிற அந்தச் சூழலில் மக்கள் குறிப்பாகப் பெண்கள் புதிதாகக் குடியேறுவதற்கு அஞ்சுகிறார்கள். 


2. குடிமகன்களாகி விட்ட குடும்பத் தலைவர்கள்

முகாம் வாழ்க்கையினால் ஏற்பட்ட மன விரக்தி குடும்பத்திலுள்ள பெரும்பாலான ஆண்களை குடிப்பழக்கத்துக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது. தவிரவும் முகாம்களைவிட்டு வெளியே வந்து குடியேறுபவர்களுக்கு இராணுவம் சாராயம் காய்ச்ச அனுமதி வழங்குகிறது. இராணுவமும் மக்களும் கூடிக் குடித்து மகிழ்கிற நாளாந்த விழாக்களாக இப்பழக்கம் மாறிவிட்டிருக்கிறது. இதில் இராணுவத்துக்குள்ள சாதக நிலைமைக்கு முற்றிலும் எதிரானது, சாராயம் காய்ச்சுபவர்களின் நிலை. இதில் அவர்களுக்குப் பெரிய லாபமொன்றும் இல்லை. ஆனால் அவர்கள் மொடாக் குடிகாரர்களாகிவிட்டார்கள். புதிதாகப் பரவி வருகிற இப்போதைப் பழக்கத்துக்குப் பெரும்பாலான ஆண்கள் அடிமைகளாகி விட்டமை கொடுமையே! இவ்வாறு குடித்துவிட்டுத் தன்னிலை மறந்திருக்கிற தம் குடும்பத்து ஆண்களால் தமக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்பது பெண்களின் கணிப்பு! இதனால் தம்முடைய இடங்களுக்குச் செல்வதைவிட மக்கள் நெருக்கமாக உள்ள முகாம்கள்தான்; தமக்குப் பாதுகாப்பு என்று பெண்கள் கருதுகின்றனர். 

3. வீடமைப்பதற்கான நிதி வழங்கும் முறை

பாதிப்புற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டிக் கொடுப்பதற்கு முன்வந்த நாடுகளிடமிருந்து இலங்கை அரசாங்கம் தாராளமாக நிதியினைப் பெற்றுக்கொண்டது. ஆனால் ரூபா 25,000/=  என்கிற அடிப்படையில் ஆரம்பித்து கட்டம் கட்டமாக அவற்றை வழங்கிவருவதால் குடிப்பழக்க-முள்ளவர்கள் அப்பணத்தைக் கொண்டு தமது குடியிருப்பிடங்களை அமைப்பதற்குப் பதிலாக குடித்தே முடித்துவிடுகின்றனர். அல்லது வேறு செலவுகள் செய்து தொலைக்கிறார்கள். 

4. உடல் பலவீனம் அல்லது வேலை செய்ய விரும்பாமை

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக முகாம்களுக்குள் முடங்கியிருந்துகொண்டு வயிற்றை நிறைப்பதற்கு மட்டும், போஷாக்கின்றிச் சாப்பிட்டுப் பழகிவிட்ட ஆண்களால் இப்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை அல்லது அவர்கள் விரும்பவில்லை.  முகாமில் கிடைக்கிற முக்கிய உணவுப்பொருட்களான அரிசி, மா, சீனி, பருப்பு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடில்லாததால் கறி சமைப்பதற்கு மட்டுமே அவர்கள் எதையாவது தேட வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் இருந்து பணம் வருமாயின் இதுவும் இவர்களுக்கு இலகுவாக அமைந்துவிடுகிறது. பிள்ளைகளுக்குப் பாடசாலை வசதிகள் இன்னமும் செய்து தரப்படவில்லை. ஆக பள்ளிச் செலவும் இல்லை. ஏன் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எந்தவொரு கனவு அல்லது எதிர்பார்ப்பு கூட பெற்றோர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. ஆக தாங்கள் எதற்கு வேலை செய்ய வேண்டும் என்கிற கேள்வியை எம்மிடமே கேட்கிறார்கள்.

முகாம் வாழ்க்கையைப் போரின் எச்சமாக எடுத்துக்கொண்டாலும் தொடர்ந்து பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் வாழ்வதற்கு எவ்வளவு சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று எம்மை அதிர வைக்கிறார்கள் இந்த மக்கள். அவர்களுக்கு என்ன சொல்லி நம்பிக்கையை வரவழைப்பது என்று நாம் சிந்திப்பதற்கே அங்கு அவகாசமில்லை.

மரங்கள் இல்லாத வெட்டவெளி, அதில் அடிக்கிற அனல் காற்று, மழை வெள்ளம், பனி, ஆபத்தான ஜந்துகள் என அனைத்தையும் தாங்குவதற்குத் தாங்கள் தயார். ஆனால் தனியாக இருப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று கூறிக் கண்ணீர் வடிக்கிற மக்களின் குறிப்பாகப் பெண்களின் முகங்களைப் பார்த்தால்.... (இங்கே எனக்கு எந்த வார்த்தையும் வரவில்லை)

பிளாஸ்டிக் கூரைகளின் கீழ் மக்கள் படும் அவலம் 

இடம்பெயரநேர்கிற மக்களுக்கான முதன்மைத் தேவை, புகலிடம் வழங்குவதுதான் என்கிற மனிதநேயம் குறித்து எந்தவொரு நாடும் இரண்டாவது கருத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏதாவதொரு நாட்டில், மக்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கிறபோது, அவர்களுக்குப் புகலிடம் வழங்குவது எவ்வாறென்று அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுப்பதற்குள்ளாகவே, உதவி வழங்குகிற அல்லது நன்கொடை வழங்குகிற ஏதாவது ஒரு நிறுவனமோ அல்லது பலவோ பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிளாஸ்டிக் கூரைகளை(Tents) உடனடியாக அனுப்பி உதவிவிடு கின்றன.  இது தற்காலிகமானதொரு புகலிட வசதிதான். இதன் அடுத்த கட்டம் என்ன?

மனித உயிர்களால் இந்தப் பிளாஸ்டிக் கூரைகளை எவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியும்? என்கிற கேள்விகளுக்கு விடைதேடுமுகமாகவும் பிளாஸ்டிக் கூடாரங்களுக்குள் வானிலை, காலநிலை ஆகிய காரணிகள் செலுத்தும் தாக்கம், கூடாரங்களுக்குள் குலைந்துபோகக்கூடிய கலாசாரம் மற்றும் பண்பாடு, குறுகலான இடப்பரப்பில் முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் படுகின்ற அவலங்கள், சுகாதாரக் குறைபாடுகள் ஆகிய விடயங்கள் குறித்து இங்கே என்  சிந்தனையைத் திருப்புகிறேன்.

பிளாஸ்டிக் கூடாரங்களின் தேவை இடம்பெயர்கிற, இடம்பெயராத இருசாராருக்கும் பொதுவானவை ஆனாலும் அவற்றின் வகைகள் பல்வகைப்பட்டவை! போர், இயற்கை அனர்த்தம் முதலிய திடீர்க் காரணங்களினால் மக்கள் இடம்பெயர நேர்கிறபோது, ஐக்கிய நாடுகளின் ஏதாவதொரு நிறுவனம்(UNO) அல்லது ஏதோவொரு சர்வதேச நிறுவனம்(International Non-governmental Organization) அல்லது நன்கொடை வழங்குகிற நிறுவனங்களிலொன்று(Donor Organization) அல்லது அரசசார்பற்ற நிறுவனமொன்று (Non-Goverenmental Organization) அல்லது எல்லாமே இணைந்து பிளாஸ்டிக் கூரைகளை வழங்கி புகலிடங்களை அமைப்பதற்கு உதவுகின்றன.

இவற்றில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையகத்தின்(UNHCR) பிளாஸ்டிக் கூரைதான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரமானதென்று கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள், உல்லாசப் பயணிகள், பாதயாத்திரை செல்வோர், களியாட்டங்களில் ஈடுபடுவோர், குழந்தைகள், பாதுகாப்புப் படைவீரர்கள் ஆகிய வகையினர் பிளாஸ்டிக் கூரையைப் பயன்படுத்துகிற இடம்பெயராதவர்கள். இவர்களுக்கான கூரைகளை மேற்சொன்ன நிறுவனங்களல்லாத வேறு நிறுவனங்கள் வௌ;வேறு தரங்களிலும், பல்வேறு வசதிகளுடனும் உற்பத்தி செய்கின்றன.

UNHCR ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்தே அகதிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற பிரதானமான உதவி நடவடிக்கை, புகலிடங்களுக்கான பிளாஸ்டிக் கூரைகளை வழங்குவதாகும். அனைத்தையும் இழந்து அவலத்துக்குள்ளாகிற மக்களுக்கு UNHCR செய்கின்ற மேன்மையான இந்தப் பௌதீக உதவி மூலம் மக்களை உளவியல் ரீதியான பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் இவ்வாறு புகலிடங்களுக்குள் தஞ்சமடைகிற மக்கள், இது தாம் குடியிருப்பதற்கு உகந்ததல்லவென்பதை அடுத்தடுத்த நாட்களிலேயே அனுபவித்தறிந்து விடுகிறார்கள். காரணம், மிகக் குறைந்த உயரம் கொண்ட ஒருசில தடிகளைக் கொண்டுதான் இப்புகலிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

உண்மையில் புகலிடங்கள் குறைந்தபட்சமாக, சீரான தட்ப வெப்பத்தில் தூங்குவதற்குப் போதிய இடப்பரப்பையும் ஆடைகளைப் பேணக்கூடிய இட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.  வெப்பம் நிலவுகின்ற நாடான இலங்கையில், உயரம் குறைவான கூடாரங்களில் இவற்றிலொன்றைத்தானும் பெறமுடியாத மக்கள் கூடாரங்களுக்கு வெளியே தான் தூங்குகிறார்கள்.

நீர் புகாத, வெப்பம் உள் உறிஞ்சப்படாத, காற்று உள்வரக்கூடிய, புகை வெளியேறக்கூடிய, தீப்பற்றமுடியாத வசதிகளோடெல்லாம் பிளாஸ்டிக் கூரைகள் தயாரிக்கப்பட்டாலும், ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இலங்கையில் பெருந்தொகையான மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்குள்ளாகி வருவதாலோ என்னவோ எளிதில் தீப்பற்ற முடியாததும், நீர் புகமுடியாததுமான வசதியை மட்டுமே கொண்டிருக்கிற பிளாஸ்டிக் கூரைகளே வழங்கப்படுகின்றன.

இப்புகலிடக் கூரைகள் நகர்த்தப்படக்கூடியவை என்பதால், அதன் வழங்குனர்களுக்கும் பெறுவோரான மக்களுக்கும் பெருத்த வசதியளிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காலநீட்சியைப் பொறுத்தும் காலநிலை குறித்தும் சிந்திப்போமானால், ஒற்றைக் கம்பத்தில் அமைக்கப்படுகிற இந்தக் கூரைகள் மட்டுமே புகலிடம் என்கிற வரைவுக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குரியது. அதிலும் தற்காலிகத்துக்காகக் கொடுக்கப்பட்ட அவற்றின் கீழ் வேறு நாதியின்றி அவர்கள் நிரந்தரமாக வாழ முடிவு செய்துள்ளமை கொடுமையல்லவா?