Tuesday, January 4, 2011

தலை நகரில் நடந்த கறிவேப்பிலைப் புரட்சி!

ராஜா மகள்

இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் கோட்டை என்று பெரும்பான்மை யினத்தவரால் பொறாமையுடன் வர்ணிக்கப்பட்டு, அங்கு வாழ்கிற நம்மவர்களால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடம் கடற்கரைத் தோட்டம். அதன் விசித்திரத்தை விளம்புகிற இந்த எழுத்து வடிவம், தற்போதைய பரபரப்பு ஓட்டங்களுக்கிடையில் சோகங்களும் சுவாரஸ்யங்களும் மிகுந்து கடந்துபோன உங்கள் தலைநகர வாழ்க்கையை குறைந்தது பத்து நிமிட நேரமாவது நிற்க வைத்து நினைவு மீட்டும் என்று நம்புகிறேன். தலைநகரில் வாழநேர்ந்த தமிழர்கள் தம் வாழிடத் தேர்வுக்காய் கடற்கரைத் தோட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் மட்டும் முரண்படாமல் ஒற்றுமை கொண்டிருந்தார்கள் என்பதற்கு நான் கூறும் விளக்கம் குறித்து உங்களுக்கு இரண்டாவது கருத்து இருக்காது என்பதும்கூட என் நம்பிக்கை. இருந்தாலும் ஒன்றும் தவறில்லை. கீழுள்ள மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

நடைபாதையின் ஒரு புள்ளியில் நிகழ்ந்த மிகச் சாதாரண சம்பவம் அல்லது நிகழ்வு நம் மொத்த வாழ்க்கையையே சில வேளை புரட்டிப் போட்டுவிட்டு மூச்சு வாங்கியிருக்கிறது. இங்கு என் தலைப்பு குறிப்பிடும் விடயத்திலும் நடைபாதை உண்டு. முழுவதையும் வாசிக்கத் தீர்மானித்து விட்டீர்களானால், முடிவுறும் வரையிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நடிகை பத்மினி அபிநயித்த நவரசங்களும் உங்கள் திருமுகங்களில் தோன்றிக் கொண்டேயிருக்கும். வேண்டுமானால் யாரையாவது மறைந்திருந்து பார்க்கச் சொல்லி, வாசிக்கத் தொடங்குங்கள்.

இலங்கையின் தலைநகரில் பல பத்து வருடங்களாக தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ நேர்ந்த அல்லது வாழ விரும்பிய இடம் கடற்கரைத் தோட்டம். 1983 களுக்கு முன்னர் தமிழர்கள் தலைநகரில் வசிப்பதற்கு அரசாங்க உத்தியோகமே பெருத்த காரணமாயிருந்தது. வர்த்தகமும் தனியார் நிறுவனப் பணிகளும் கூட இதர காரணங்களெனினும் இவை வெகு குறைவே! எனவே எம்மவர்களின் வசிப்பிடங்கள் அப்போது கடற்கரைத் தோட்டத்தை மட்டும் குறிவைக்காமல், அவரவர் பணியிடங்களைப் பொறுத்துத் தலைநகரெங்கும் பரவியிருந்தது. இவர்களின் அளவான மாதச் சம்பளத்தையோ அல்லது வருமானத்தையோ தெற்கில் அப்போது வீசிய சோளகம் ஒருபோதும் அடித்துக்கொண்டு போனதில்லை. ஏனெனில் அவர்களுடைய கையிருப்பின் அளவு, வாழ்வின் அழகோடு ஒட்டிக்கொண்டிருந்தது.

85 களுக்குப் பிறகு, ஓரளவு பண வசதி இருந்த வட பகுதிக் குடும்பங்கள் பிள்ளைகளைத் தலைநகரில் படிக்க வைக்க விரும்பினர். அதிக பணம் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து, 90 களை அண்டிய முன்னும் பின்னும் தெற்கு நோக்கிய தமிழர்களின் வரவை அதி வேகப்படுத்தியது.

வெளிநாடு போகிற உறவுகளை வழியனுப்ப, அல்லது ஏற்கனவே போனவர்களிடம் குசலம் விசாரித்து பண உதவி பெற, பிள்ளைகளைப் படிக்க வைக்க, படித்துக்கொண்டுள்ள பிள்ளையைப் பார்க்க அல்லது அவர்களுடன் சில காலமோ நிரந்தரமாகவோ தங்கியிருக்கவென வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சாரிசாரியாக மக்கள் வரத் தொடங்கினர். வருடமொன்றினை இலக்குவைத்து இத் தேவைகளுக்காகத் தெற்குக்கு வந்த மொத்தப்பேரையும் கணக்கிட்டால் இவர்களுக்குக் குறைவில்லாமல் அல்லது இணையான தொகையில் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காக அனுப்பப்படுவதற்காகத் தலைநகரில் தங்கியிருந்த வடபகுதிப் பெண்களைக் குறிப்பிடலாம். இவர்கள் தலைநகரின் மற்றைய இடங்களைவிட கடற்கரைத் தோட்டத்தில்தான் அதிகமாகத் தங்கியிருந்தனர். இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களாகப் பின்வரும் நான்கு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1. மொழிச் சிக்கல் மிகக் குறைவாக இருந்தது

தலைநகரின் மற்றைய இடங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் பேசக்கூடியவர்கள் இங்கு அதிகமாயிருந்தார்கள். அவர்களுள் அரசாங்க உத்தியோக நிமித்தம் 1983 களுக்கு முன்னரே அங்கு வந்துவிட்ட நம்மவர்களையும் அயலவர்களாக அவர்களிடமிருந்து தமிழ் கற்றிருந்த சிங்களவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் குறிப்பிடலாம். மொழி குறித்த இந்த ஆரோக்கிய நிலைமை வடபகுதியிலிருந்து புதிதாக வருகின்ற எம்மவர்கள் இங்கே இலகுவில் வாடகைக்கு வீடு பிடிப்பதற்கு வசதி செய்தது.

2. பொழுதுபோக்கும் பிரார்த்தனையிடங்களும்

தமிழர்களின் சடங்குகள் சம்பிரதாயங்களை மட்டுமின்றி கலாசாரத்தையும் பேணிக் காக்கிற நிகழ்வுகளை அரங்கேற்றுகிற இடங்களாக இராமகிருஸ்ண மிஸனும் தலைநகரத் தமிழ்ச் சங்கமும் கடற்கரைத் தோட்டத்தில் அமைந்துள்ளன. இவ்வாறு கண்டு களித்த நிகழ்வுகள் பற்றி இவ்விடத்தின் கடற்கரையில் காற்று வாங்கியபடியே கதை பேசவும் அக்கதைகளிலிருந்து பிறக்கிற விவாதங்களை வைத்து ஹாஸ்யமாகக் கதைவிடவும் என எம்மவர்கள் ரசனையுடன் பொழுதுபோக்க முடிந்தது. தவிரவும் கடல் தவிர்ந்த மற்றைய மூன்று திசைகளிலும் பஸ்ஸில் பயணம் செய்தால், எல்லாவகையான இந்துக் கடவுளர்களையும் இலகுவில் தரிசிக்க முடியும். இப்போது கடற்கரையிலும்கூட ‘விசா பிள்ளையார்’ தோன்றிவிட்டார். இவரை வணங்கினால் வெளிநாடு செல்வதற்கு விசா பெறலாம் என்றும் பெற்றவர்கள் அதிகம் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலருக்கு ஒரேயடியாக மேலே செல்லவும் விசா கிடைத்திருக்கிறது.

3. நெரிசல் இல்லாத அமைதி நிலவியது

கடற்கரைத் தோட்டத்தின் பழைய தோற்றம், பெரிய அல்லது மிகப் பெரிய வர்த்தக நிலையங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. கிராம சேவை, கிராமசபை, மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கான அத்தியாவசிய பணிமனைகள் தவிர வேறு அரசாங்க அலுவலகங்;கள், திணைக்களங்களைக் கூட கொண்டிராத பகுதியாக அது இருந்தது. இதனால் வேலைக்காகவோ கொள்வனவுகளுக்காகவோ பிற இடத்து மக்கள் வந்து போகத் தேவையிருக்கவில்லை. இதனால் கடற்கரைத் தோட்டம் ஜன நெரிசல் இன்றி அமைதியாகவிருந்தது.

4. கடற்கரைத் தோட்டத்தின் கண்கொள்ளா அழகு

காரணம் கருதித்தான் இவ்விடத்திற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கவேண்டும். பல மூலிகைச் செடிகளும் பழ மரங்களும் நிறைந்திருந்த இவ்விடத்தில் நச்சுத் தன்மையற்ற காட்டுப் பூக்களும் மலர்ந்து அழகு காட்டிக் கொண்டிருந்தது. அப்போது ஐந்து வீடுகளுக்கிடையில் ஒரு வெற்றுக் காணியாவது காணப்பட்டது. தவிரவும் அடுக்கு மாடிகளையோ தொடர்மாடிகளையோ கொண்டிராத பழைய கால ஓட்டு வீடுகள், பசுமையுடன் கூடியதோர் அழகைக் காட்டிக்கொண்டிருந்தன. எனவே திரும்பிய திசையெங்கும்; கட்டடங்கள் தெரிகிற இடங்களைவிட, பசுமை நிறைந்ததாய் வடக்கை ஒத்திருந்த கடற்கரைத் தோட்டச் சூழல் எம்மவர்களை அதிகமாகக் கவர்ந்தது.

ஆரம்பத்தில் தலைநகரில் இப்படியெல்லாம் குடியேறி வாழ்ந்த எம்மவர்களில் பெருமளவினரை 1983 ஜூலை கலவரத்தில் இழந்தோம். அல்லது எல்லாம் சூறையாடப்பட்டு விரட்டப்;பட, வடக்கில், எம்மிடத்தில் சந்தித்தோம். சிங்கவெறியாட்டின் மிக முக்கியமான காலப்பகுதியன்றோ இது!

1985 களுக்குப் பிறகு தலைநகரில் தமிழர்களைக் கண்டபோதெல்லாம் சிங்கள இனவாத அரக்கர்களுக்குப் பித்தம் தலைக்கேறியது. 1983 இல் முடிவுறாத அத்தியாயங்களை தனியாட்களாகவும் அரசாங்கமாகவும் வெறியாட்டத் தொடங்கினர். இதனால் சிங்களவர்கள் அடர்ந்து வாழ்ந்த பகுதிகளைப் பயந்து தவிர்த்த தமிழர்கள், தமிழர்கள் அல்லது தமிழ் பேசிய மக்கள் நிறைந்த பகுதிகளையே தம் வாழிடமாகத் தெரிந்தெடுத்தனர். ஆக கடற்கரைத் தோட்டம்தான் இதற்குச் சாலவும் பொருத்தமாயிருந்தது. அதுபோலவே புலிகளின் வெற்றிச் செய்திகள் கிட்டியபோதெல்லாம் தமிழர்கள் அதிகமாக இருக்குமிடங்களில் சிங்களவர்கள் வசிக்கப் பயந்தனர். தமிழர்களை வெறுத்தனர், தம் இருப்பிடங்களை மாற்றவும் செய்தனர்.

சிங்க வெறியாட்டின் சில்மஷங்களிலொன்றாய் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்த தமிழர்கள் மட்டும் தம் இருப்பிடத்தைப் பொலிஸில் பதிவு செய்யவேண்டுமென்று சட்டம் கொண்டுவரப்பட்டது. பதிவு செய்திருந்தாலும்கூட காரணமின்றி இளைஞர் யுவதிகளைக் கைது செய்வது, கதை முடிப்பது என தாங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கு முரணாகவும் துர் சம்பவங்களைத் தொடர்ந்து நடத்தினர்.

சர்வதேசமும் சந்தித்துக்கொள்கிற தலைநகரில் கண்ணுக்குத் தெரியாமல் தமிழர்களின் கதை முடிப்பதில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற சிங்கள அரக்கர்கள் தம் பாவச் செயல்களைப் பல ரூபங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். தலைநகர் தவிர்ந்த தமிழர் பிரதேசமெங்கிலும் விமானத் தாக்குதல் மூலம் தமிழர்களின் உடலைச் சின்னாபின்னமாக்கி அழிக்கிற சிங்க வெறியாட்டு நடந்தது. இதனால் வடக்குவாழ் தமிழர்கள் தம் உயிர்களைக் காப்பதற்காக நாட்டைவிட்டு எங்காவது ஓடவேண்டியிருந்தது. இதற்காகத்தான் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் மிகப் பெருமளவினர் தலைநகருக்கு வரவேண்டியது நிர்ப்பந்தமாகியது.

தலைநகரில் முறையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு விமானம் ஏறும் வரையில் தங்களுக்கு எதுவும் நடக்கலாம்! ஆனால் எது நடந்தாலும் தம் உறவும் சுற்றமும் அறியவேண்டும் என்று இயல்பாகவே தோன்றக்கூடிய மனித எண்ணம் ஒவ்வொரு தமிழர்களின்ன மனதிலும் தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பாகியது. இதனால் ஏற்கனவே தமிழர்கள் விரும்பி வாழத் தொடங்கியிருந்த கடற்கரைத் தோட்டமே புதிதாக வருகின்ற பெரும்பாலானோருடையதும் இருப்பிடத் தெரிவாகியது. நிதர்சனமான இந்த நிஜங்களால் காலத்துக்குக் காலம் தமிழர்கள் கடற்கரைத் தோட்டத்தை நிறைக்க, சிங்களவர்களின் வருகையும் வசிப்பிடமும் அங்கு அருகத் தொடங்கியது. ஏற்கனவே இருந்தவர்களும் தம்மிடங்களை விற்றுவிட்டு வேறிடம் தேடிப் போயினர். இன்னொரு வகையில் குறிப்பிடின், வேகம் கண்ட தமிழர்களின் கடற்கரைத் தோட்ட வருகை, சிங்களவர்களை அங்கிருந்து படிப்படியாக வெளியேற வைத்ததெனலாம். 2009 ஆரம்பம் வரையில் வீதிக்கு ஐந்து சிங்கள வீடுகள்கூட கடற்கரைத் தோட்டத்தில் இருக்கவில்லை. முஸ்லிம்கள் ஓரளவில் வசித்தார்களானாலும் தமிழர்களே பெரும்பான்மையாயினர்.

ஆனால் வருடா வருடம் அங்கு அதிகரித்த தமிழ் மக்கள் தொகைக்கேற்ப வர்த்தக நிலையங்கள் உருவாகியிருக்கவில்லை. அல்லது அங்குள்ள மொத்தக் குடியிருப்பாளர்களின் கொள்வனவுத் தேவையைப் பாதியளவுகூடப் பூர்த்திசெய்ய முடியாதளவுக்கு ஒரு சில சில்லறைக் கடைகளே தோன்றியிருந்தன. சந்தைக்கென்றொரு கட்டடம் இருந்தது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை. இதனால் கடற்கரைத் தோட்டவாழ் தமிழ் மக்கள் சிறப்பான அல்லது மிகையான கொள்வனவுகளுக்காக, குறிப்பாக காய்கறிகள், பழவகைகள், மாமிச உணவுகள் போன்றவற்றுக்காக கோட்டைக்கோ அல்லது கிருலப்பனைக்கோ செல்லவேண்டியிருந்த நிலைமை 2001 வரையிலும் இருந்தது.

அங்கிருந்த சிங்கள வியாபாரிகள் பொருட்களின் தரத்தினைச் சரிபார்த்து வாங்குகிற தமிழர்களை உன்னிப்பாக அவதானித்தனர். வெற்றிலைக் கறை படிந்த தம் பற்களைக் காட்டி நாணியும் கோணியும் தமது வியாபாரத்தை நல்லபடி நடத்தினர்.
தலைநகர்வாழ் பெருமளவு முஸ்லிம்களின் பிரதான தொழில் வர்த்தகம். அவர்களுடைய வர்த்தக நிலையங்கள் கடற்கரைத் தோட்டம் தவிர்ந்த வேறு இடங்களில், கோட்டையிலோ அல்லது அதை அண்மித்த இடங்களிலோ இருந்ததால், அவர்கள், தம் நுகர்வுப் பொருட்களை அவ்வந்த இடங்களிலேயே மொத்தமாகக் கொள்வனவு செய்து திரும்பினார்கள். தவிரவும் இவர்களின் நுகர்ச்சி வீதம் அதிகம் என்பதாலும் அப்போதெல்லாம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் கடைகளுக்குச் செல்வதில்லையாதலாலும் கடற்கரைத் தோட்டத்தின் சில்லறைக் கடைகள் இவர்களுக்குத் தேவைப்படவேயில்லை.

சிங்களவர்களைப் பொறுத்தவரையில் வருமானத்தின் மிகையோ குறையோ அவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பாக உணவுப் பழக்கத்தில் தாக்கம் செலுத்துவதில்லை. ஆடம்பரத்தின் எந்தவொரு கூறினையும் அறிந்திராத, அறிந்திருந்தாலும் கை வந்திராத இந்தச் சமூகத்திற்கு பாண், பருப்பு, பலாக்காய், கருவாட்டுடன் ஏதாவதொரு இலை வகை இருந்தால் போதும். அவையெல்லாம் கடற்கரைத் தோட்டத்திலேயே கிடைத்ததால் கொள்வனவுச் சிக்கல் எதுவும் இவர்களுக்கிருக்கவில்லை.
இலங்கையில் ஆட்சி மாற, காட்சிகளும் மாறிய காலம் 2001. ரணில் ஆட்சிப்பொறுப்பெற்று சர்வதேசங்களைச் சாட்சிக்கு வைத்து, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட சமாதானப் பிரகடனத்துக்குப் பின்னர் கொழும்பு தெரியாமல், கொழும்புக்கு வராமல் இருப்பதை இழுக்கென்றுணர்ந்த எம்மவர்கள். குறிப்பாக இளைஞர்கள் சாரி சாரியாக தலைநகருக்கு வந்து போயினர். பிறந்ததிலிருந்தே ரயிலைக் கண்டிராத, தியேட்டரில் படம் பார்த்திராத பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் எண்ணிறைந்தோர் தமது விருப்பத்தை இக்காலகட்டத்தில்தான் முதன் முறையாகப் பூர்த்தி செய்ததை நானறிவேன்.

2001 காலப்பகுதிக்கு முன்னர் வெளிநாடு போன பெரும்பாலானவர்களின் சொந்தங்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் தலைநகர் வந்து முதன் முறையாக தொலைபேசியூடாக தம் பாசத்தைப் பரிமாறினர். இங்கு பாசப் பரிமாற்றத்தை விட பணத்துக்கான கோரிக்கைதான் முதன்மை என்கிற நிலை இருந்ததை மறுக்க முடியாது.

இவ்வாறு நீண்ட நெடுங்காலத்துக்கு பின்னர் வடக்கு-தெற்கு சுதந்திர போக்குவரத்தில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்தனர் எம்மக்கள். ஆனால் பணப் புழக்கம் உள்ள நம்மவர்களைக் கண்டதும் சிங்களப் படைகளுக்கு கைது செய்கிற மேனியா வந்தது. அது பின்னர் தொற்றுநோயாகிப் படர்ந்து சிங்களவர்களின் பாவப் பட்டியலில் நிலைகொண்டது. தமிழர்களிடமிருந்த அசையும் சொத்தை வைத்து சிங்களவர்கள் தம் எதிர்காலத்தைக் கனவு கண்டார்கள்.

தமிழர்களை நசுக்குவதற்கான சிங்களச் சட்டங்களின்படி, தலைநகர்வாழ் தமிழர்கள் உரத்துத் தும்மக்கூட முடியாது என்கையில் தலைமறைவாகச் செலவு பண்ண முடியுமா என்ன! முடிந்தாலும்கூட எப்போதும் எங்களுடன் கூடிக் கும்மியடித்துக்கொண்டிருந்த, இருக்கிற எட்டப்பர்கள் விடுவார்களா?? சிங்கள அரக்கர்களிடம் தன் இனத்தையே காட்டிக்கொடுத்துக் கமிஷன் வாங்கி இன்றுவரையில் கேவலாகப் பிழைத்துக்கொண்டிருக்கிற இந்த ஜென்மங்கள் சிங்களவனுக்குச் சொல்லிக் கொடுத்த கெடுமதிகளின் வகைகளும் நீளமும்தான் இன்றுவரை, இப்படியெல்லாம் நாங்கள் சிங்களவனால் ஆளப்படுவதற்கு அத்தாட்சி.

தலைநகரில் தங்கியிருந்த, இருக்கிற எமது இனத்தின் ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் “எப்போது வேண்டுமானாலும் நான் கைது செய்யப்படலாம்” என்கிற அச்சமும் அது ஏற்படுத்துகிற பலவீனமும் தவிர்க்க முடியாத சித்திரவதையாக இருந்தது, இருக்கிறது. “இதனால், இந்தச் சித்திர வதையால் மட்டும் வாழ்வில், முன்னேற்றத்தில் நீங்கள் எதை இழந்தீர்கள்?” என்று கேட்டால் நம் ஒவ்வொருவருடைய புலம்பல்களும் வெவ்வேறாகவேயிருக்கும்.

ரணில் ஆட்சியின் ஆரம்பம் மிக நன்றாக இருக்கவே வெளிநாடுகளுக்குப் போன தமிழர் பலர் தாயகம் திரும்புவதாய் தீர்மானமெடுத்தனர். பலர் பத்திரமாக வந்துபோயினர். ஒருசில வருடங்கள்தான் இப்படிக் கடந்தன. மீண்டும் தொடங்கியது சிங்க வெறியாட்டு. அதன் பிரதானமாக, வடக்கெங்கிலும் வெடிக்கத் தொடங்கியது. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரவிருந்தவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப் போக, அவர்கள்; அங்கேயே உறைந்து போனார்கள். தவிரவும் தமது குடும்பத்தினரைக் கொழும்பிலேயே தங்கவைக்க முடிவும் செய்தார்கள். தலைநகரிலும் உயிருக்கு ஒன்றும் உத்தரவாதமில்லையானாலும் விமானக் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகி மடியத் தேவையில்லையென்று சிந்தித்திருப்பார்கள் போலும்! ஆனாலும் எட்டப்பர்கள் காட்டிக்கொடுக்க, அரக்கர்களால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் எத்தனையோ இளைஞர் யுவதிகளை, வாழ்வில் உருப்படியாக ஒன்றும் செய்யவிடாமல் உருக்குலைத்தது. தமிழர்களைக் கைது செய்வதற்காக ஜோடிக்கப்பட்ட பொய்களுடன் தெற்கில் அலைந்து கொண்டிருக்கிற காவல் துறையிடமிருந்தும் கேவலமான பிழைப்பு நடத்துகிற எங்கள் எட்டப்பர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்ள தலைநகரில் தமிழர்கள் எப்போதும் பணம் வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

வெளிநாடுகளின் உச்சபட்ச வெப்பம் அல்லது உறை பனிக்குள் தம்மை வருத்தியபடி உழைத்துக்கொண்டிருந்த எம்மவர்கள் தலநகரில் தங்கியிருந்த தம் உறவுகள் மீது காட்டிய பாசத்தின் உச்சமாய், அவர்களே முன்வந்து தேவைக்கு மிகையாக அனுப்பப்பட்ட அல்லது உறவுகளால் அனுப்பும்படி கோரப்பட்ட பணமே இருந்தது. இது மிகப் பயங்கரமானதோர் பாதையூடாக எம்மவர்களை ஓட்டிச் சென்றது.

ஒரேயடியாகப் பெருந்தொகைப் பணத்தைக் கையிருப்பில் வைத்திருந்த எம்மவர்களில் பெரும்பாலானோர் தடுமாறினர். ஆடம்பரத்தின் அத்தனை கூறுகளையும் கற்க விளைந்தனர். நமக்கென்றிருந்த கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்கவழக்கம் அத்தனையையும் தலைநகரில் தமக்குச் சாதகமான இடங்களில் தொலையவிட்டு நடந்தனர். அதுவே தமது அந்தஸ்து என தமக்குத் தாமே கற்பிதமும் செய்தனர். பணத்தை விசிறியடிக்கப் பழகினர். இவர்கள் வெளிநாட்டுக் காசுவாசிகள் என்று மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டார்கள். இவர்களால்; கொழும்பில் சிங்கள மற்றும் இந்திய வர்த்தகர்களின் வியாபாரம் களை கட்டத் தொடங்கியது. அரசாங்க வங்கிகள் புதுப் பொலிவு பெற்றதுடன் புதிய பல தனியார் வங்கிகள் உருவாகவும் செய்தன.

மேலும் தமிழர்களிடம் தாராளமாகப் புழங்கிய பணத்தைக் கண்டு, சிறியதும் பெரியதுமாயப் புதிய பல வர்த்தக நிலையங்கள் கடற்கரைத் தோட்டம் பூராவும் முளைக்கத் தொடங்கின. திரும்பிய திசையெங்கிலும் பல வன்னங்களிலும், வண்ணங்களிலும் வர்த்தக நிலையங்கள் சிரித்துக்கொண்டு நின்றன. சந்தையிலும் சந்தடி நிறைந்தது. ஆனாலும் காய், பழம், விற்கிற நடைபாதை வியாபாரிகளைக் கடற்கரைத் தோட்டத்தில் காண முடியாதிருந்தது. சந்தை விலையை விட இவர்களிடம் பேரம் பேசி விலை குறைத்து வாங்கலாம் என்பதால்தான் எங்கிருக்கிற மக்களும் நடைபாதை வியாபாரிகளை விரும்புவதுண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவான அம்சம்.
ஆனால் கடற்கரைத் தோட்டக் காசுவாசிகள் விதிவிலக்காய் இருந்தார்கள். பல காலமாக அங்கு வாழ்ந்து வருகிற தமிழர்களைப்போலவே மிகை அல்லது சிறப்பான காய்கறி, பழவகைக் கொள்வனவுக்காக பல் வேறிடங்களுக்குப் போன இவர்கள், நடைபாதைக்குப் பொருத்தமே இல்லாமல், பேரம் பேசாத வியாபாரப் பழக்கமொன்றினைப் புதிதாய் உருவாக்கினார்கள். காசை விசிறியடிப்பதில் வீண் டம்பம் கொண்டிருந்த இவர்களின் போக்கினை அங்கிருந்த வியாபாரிகள் உற்றுக் கவனித்தார்கள்.
தன்னை முடிந்தவரை தாழ்த்தி, ‘மாத்தையா’ அல்லது ‘நோனா’ என்றழைத்துக் குழைந்தபோது எஜமானத்துவத்தில் பெருவிருப்பும் ஜாதி வெறியில் உச்சமும் கொண்டிருந்த எம்மவர்கள் தலை குப்புற விழுந்தார்கள். வெளிநாட்டுக் காசுவாசிகளாகத் தம்மை அவர்களுக்கு இனங்காட்டுவதில் பெருமை கொண்டார்கள். அப்பாவித்தனம் மிகும்படி அவர்கள் காட்டிய வியாபாரப் புன்னகையைப் போலியென்றிவர்கள் உணர்வதற்கு அவகாசம் இருக்கவில்லை. அவனிடம் குசலம் விசாரித்தபடியே அவசர அவசரமாகக் கொள்வனவுகள் நடந்தன.
இதற்கு மொழிச் சிக்கலையும் காரணமொன்றாகக் குறிப்பிட முடிந்தாலும் அது மட்டுமே காரணமென்று கொள்ளமுடியாது. மிதமிஞ்சிய காசுப் புழக்கம் காரணமாக அதை விசிறியடிப்பதில் அநியாயமாகப் பெருமை கொண்டிருந்த இவர்கள் கணக்குப் பார்த்துச் செலவு செய்வதில் பலவீனர்களாகிவிட்டிருந்தனர்.

வெளிநாடுகளில் எத்தனையோ வகையான அழுத்தங்களுக்கு மத்தியில் தம் உறவுகளுக்காகவென்று உருகி உருகி அனுப்பிய பணத்தைத் தலைநகரில் பெறுமதியழக்கச் செய்த, செய்துகொண்டிருக்கிற பெற்றோரை, பிள்ளைகளை, மனைவிமாரை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். தலைநகரின் சொகுசு வீடுகளில் நிதானமாகத் தங்கியிருந்துகொண்டு அவசரமாகச் செலவளித்துக்கொண்டிருந்த இவர்களை, இவர்கள் தவிர்ந்த மற்றெல்லோரும் கவனிக்கவே செய்தனர். இதனால் இவர்களின் கையிருப்புகள் சிங்களவர்களால் பல வடிவங்களில் இலக்கு வைக்கப்பட்டன.
புறக்கோட்டையை அண்டியும் கிருலப்பனை, நுகேகொட போன்ற இடங்களிலும் நடைபாதையில் பத்து ரூபா அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படுகிற கீரைக்கட்டுக்காக தமிழன் ஆயிரம் ரூபா நோட்டை நீட்டியபோது சிங்களவன் மயங்கி, பின் தெளிந்தான். அதுவரை தன்னியல்பில் வியாபாரம் நடத்திக்கொண்டிருந்த ஒவ்வொரு சிங்கள மூளையையும் தமிழனின் பண விசிறல் புத்துணர்வு பெற வைக்கவே, ஒளிமயமான தமது எதிர்காலத்தை அவர்கள் கடற்கரைத் தோட்டத்தில் கண்டார்கள். தாமதிக்காமல் தமது வியாபாரத்தை தமிழர்கள் விரும்பி நுகரும் பொருட்களுடன் அவ்விடம் நகர்த்தினார்கள்.

விளைவாக, 2001 களுக்குப் பின்னர் காய்கறிகளாலும் பழவகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கடற்கரைத் தோட்ட நடைபாதைகளில் தமிழர்கள் ஆனந்தமாக வலம் வந்தனர். இதில் நீங்களும் ஒருவராக இருந்திருக்காவிடினும் குறைந்த பட்சம் இந்தக் கண்கொள்ளா அழகைக் காணவேனும் செய்திருப்பீர்கள். காய்களையும் பழங்களையும் நன்கு குளிப்பாட்டி, ஈரம்போக்கி, பவுடர் பூசி பொட்டும் பூவும் மட்டும் வைக்காத குறையுடன் தமிழரைக் கண்டபோதெல்லாம் ‘மாத்தையா’, ‘நோனா’ என்றழைத்து அவற்றை அழகு காட்டினர். ஏற்கனவே புறக்கோட்டையிலும் கிருலப்பனையிலும் அல்லது பிற இடங்களிலும் கண்ட இந்த வியாபார முகங்களை திடீரென்று தம்முடைய இடத்தில் கண்ட எம்மவர்கள் அங்காந்து மலர்ந்தனர்."உங்களுக்காகவே நாங்கள் இங்கு வந்திறங்கி யிருக்கிறோம்” என்பதாக வியாபாரிகள் தமிழனின் உச்சியில் ஐஸ் வைத்து ஆரம்பித்த நடைபாதை வியாபாரம் நன்கே சூடு பிடித்தது.

ஒரு சில மாதங்கள்தான் கடந்திருக்கும். நாணியும் கோணியும் தமிழர்களுக்கென்றே விற்க வந்த நடைபாதை வியாபாரிகளும் கடற்கரைத் தோட்ட வீடுகளின் உரிமையாளர்களும் இரவு பகலாக றூம் போட்டு யோசித்து, விலைகளை இஸ்டத்துக்கு உயர்த்தினர். அது மற்றெந்த இடத்திலும்; விற்கப்படுகின்ற பொருட்களையோ வாடகை வீடுகளையோ காட்டிலும் குறைந்தது அரை மடங்காவது அதிகமாயிருந்தது.

நாகரிகம் வீறுநடை போட்டது. முஸ்லிம் பெண்களும் கொள்வனவுக்குத் தயாராயினர். “இங்கேயே எல்லாம் வாங்கமுடியும்” என்று முதன் முதலில் வெளியில் வந்த முஸ்லிம் பெண்களை கடற்கரைத் தோட்ட நடைபாதை வியாபாரிகளின் விலைகள் அதிரவைத்தன. கூடவே மாதச் சம்பளத்தை நம்பியிருந்த நம்மவர்களையும் புலம்ப வைத்தது. “ஏன் இவ்வளவு விலை?” என்று கேட்டபோது, வெற்றிலைக் கறை தெரிந்த வியாபாரச் சிரிப்பு மட்டும் பதிலாய் உதிர்ந்தது. ஆனால் இப்போது நாணுவதையும் கோணுவதையும் அவர்கள் சுத்தமாக மறந்து விட்டிருந்தார்கள். தம்மோடு பேரம் பேசாத உறவினை வைத்திருந்த வெளிநாட்டுக் காசுவாசிகளால் அமோகமான வியாபாரம் நடக்குமென்கிற அவர்களின் நம்பிக்கையை காசுவாசிகள் தொடர்ந்து காப்பாற்றினர். ஆக காசுவாசிகளின் ரூட்டே தனியென்றானது.

இதைக் கண்டு பொறுக்காமல் சினங்கொண்ட மாதச் சம்பள தமிழ் உத்தியோகத்தர்களும் காசுவாசிகளை வியாபாரிகள் முன்னிலையிலேயே வைதனர். அல்லது பின்னால் முணுமுணுத்தார்கள். இதிலெதனையும் சட்டை செய்யாத வியாபாரிகளின் இப்போதைய பார்வை, “இஸ்டமென்றால் வாங்கு, இல்லையேல் விலகு” என்று அர்த்தப்படுத்தியது அல்லது மிரட்டியது. நாளடைவில் இதை உரத்துச் சொல்லவும் செய்தார்கள்.

நடைபாதை வியாபாரிகளுக்குப் பிடித்தமான வாடிக்கையாளர்களாகிவிட்ட காசுவாசிகளின் கொள்வனவுப் பாணி பற்றியே தனியொரு கட்டுரை எழுதலாம். எப்போதும் ஏதோ ஓர் அவசரம் தெரிகிற நடை அவர்களுடையது. நடைபாதையில் நிற்க முடியாதளவுக்கு எவ்வளவு மக்கள் குழுமி நின்றாலும் தன் வாடிக்கையாளனான காசுவாசியை வியாபாரி தலைநிமிராமலேயே மோப்பம் பிடிப்பான். “மாத்தையா… மொனவத ஓண?” என்கிற அவனுடைய அதிகபட்ச மரியாதைத் தொனியில் மற்றவர்கள் விலகி காசுவாசிக்கு இடம்கொடுப்பார்கள். தனக்குத் தேவையான பொருட்பட்டியலுடன் காசுவாசி பையையும்; கொடுத்துவிட்டுப் போய்விடுவார். அவசரமாகப் போகிறாராம் என்று அதற்குப் பொருள்.

திரும்பி வரும்போது பொருள் நிரம்பிய பையை வியாபாரி கொடுத்துவிட்டு, ‘இவ்வளவு’ என்பான். அடுத்த கேள்வியில்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு, நிறையில் வெட்டி விலையில் கூட்டித் தனக்குச் செய்யப்பட்ட விசித்திர வியாபாரத்தைக் கையிலோ மோட்டார் சைக்கிளிலோ அல்லது காரிலோ சுமந்துகொண்டு போகிற காசுவாசிகளைக் கண்டு சிங்கள வெற்றிலைப் பல்லன் மனசுக்குள் எப்படியெல்லாம் எள்ளி நகையாடியிருக்கிறான் என்பதை தமிழன் அப்போது உணரவில்லை. இதைக் கண்டால் சிலருக்குக் கோபம் வரும். சிலர் கேலி செய்வார்கள். சிலர் பயந்தார்கள். ஆனால் பலரும் அமைதியாகவே நகர்ந்தார்கள். அவ்வாறு நடந்தவர்களின் மனசுகளில் இவர்கள் பற்றி என்னென்ன தோன்றியதோ! இவ்வாறு நவரச உணர்வுகளும் கலந்து தெறித்த கடற்கரைத் தோட்ட நடைபாதை, 2001 ற்குப் பின்னர் நடக்கவே முடியாத நடைபாதை ஆகியது.

முன்பு வெறிச்சோடிக் கிடந்த தம் இருப்பிடத்தில் இவ்வளவு வசதிகள் வந்தபின்னர், விலையோடு முரண்டு பிடித்தவர்கள் யாரும் வேறெங்கும் கொள்வனவுக்குப் போகவில்லை. வியாபாரி இஸ்டப்பட்டு விதித்த விலைக்குக் கட்டுப்பட்டு எல்லோராலும் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பத்து ரூபா விற்ற கீரை இருபதாகி முப்பதாகி இப்போது ஐம்பது ரூபாவுக்கு விற்கப்படுகிறது. பத்து ரூபாப் பொருளுக்குக் கூட ஆயிரம் ரூபாவை நீட்டினால் அவனுக்குப் பேராசை வருவதில் என்ன தவறிருக்க முடியும்!

2001 ஆம் ஆண்டு கடற்கரைத் தோட்டத்தில் இரண்டு ரூபாவுக்கு விற்ற காட்டுக் கறிவேப்பிலைக் கட்டொன்று அடுத்தகட்டமாக ஐந்து ரூபாவாக உயர்ந்தது. “கறிவேப்பிலைக்கே இந்த விலையா?” என்றவனைக் கேள்வி கேட்காமல், கேட்க முடியாமல் தமிழர்கள் எல்லோரும் வாங்கத்தான் செய்தார்கள். ஏனெனில், “இஸ்டமென்றால் மட்டும் வாங்குங்கள்” என்று ஏற்கனவே எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறதே!

காலம் இப்படியெல்லாம் ஓடி, 2007 ஐத் தொட்டது. வெளிநாடுகளில் வேலை செய்துகொண்டிருந்த நம்மவர்களின் வருமானம் மீது அவ்வந்த நாடுகள் கடும்போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததால், இவர்களுக்கு மாதாந்தம் வந்துகொண்டிருந்த பணம் பாதியானது. அல்லது அதையும் விடக் குறைந்தது. இதன் விளைவு எத்தனை சுவாரஸ்யமானதென்று பாருங்கள்.

2007 இல் கடற்கரைத் தோட்டத்தில் கறிவேப்பிலைக் கட்டொன்றின் விலை பத்து ரூபாவானது. என்னே ஆச்சரியம்! காசுவாசிகள் உட்பட யாருமே வாங்கவில்லை. நாறிய மீனைக் கூவி விற்கிறவர்களைப் போல கறிவேப்பிலை வியாபாரிகள் இரண்டு நாட்களாக கறிவேப்பிலைகளைப் பரப்பி வைத்துக் கூவோ கூவென்று கூவிப் பார்த்தார்கள். ம்ஹூம் ....  எவரும் இசையவில்லை.

மூன்றாவது நாள், ஒரு ஞாயிற்றுக் கிழமை, வெளியில் செல்லமுடியாதளவுக்குக் கடுமையாக மழை பெய்து ஓய்ந்தது. மறுநாள் 10 மணியளவில் அலுவலக அவசரத்துடன் கடற்கரைத் தோட்ட நடைபாதையில் நான்…! 

வழமையான காய்கறி அலங்காரங்களுக்குப் பதிலாய் அழுகிப்போன கறிவேப்பிலைகள் குவிந்தும் பரவியும் கிடந்த காட்சியைக் கண்ட மற்றவர்கள் என்ன நினைத்தார்களோ, அவர்களெல்லோருடைய உணர்வுகளின் ஒட்டுமொத்த கலவையாக நான் இருந்தேன். ஒரு சில நிமிடங்களுக்குள் என் முகத்திலும் தான் நவரசங்கள். இறுதியில் எனக்கு ஒன்று மட்டும் தோன்றியது, இதனால் ஒரு மாற்றம் வருமென்று!

பஸ்ஸிற்காக நான் காத்து நின்ற அடுத்த பத்து நிமிடங்களுக்குள் செம்மஞ்சள் நிற மேலங்கி அணிந்த துப்புரவுப் பணியாளர்கள் இத்து இறந்து போய்க் கிடந்த கறிவேப்பிலைகளைக் கூட்டி அள்ளிக்கொண்டு போனபோது என் கண்களில் நீர்: அது தம் இலைகளை அவசரமாகவும் அநியாயமாகவும் இழந்த அந்த மரங்களுக்கானது!

அடுத்த நாள் கறிவேப்பிலையின் விலை பழையபடி ஐந்து ரூபாவுக்கு விற்கப்பட்டதில் எனக்கு ஆச்சரியமில்லை.

தலைநகரிலுள்ள சிங்கள ஊர்ப் பெயரின் தமிழாக்கமே கடற்கரைத் தோட்டம்.

No comments: