Saturday, April 7, 2012

கறுப்பு வெள்ளை கலையழகு


“காலை 9.45 மணிக்குச் சரியாக வந்துவிடுங்கள். உங்களுடன் ஒரு 15 அல்லது 20 நிமிடங்கள்தான் பேசமுடியும்” –  இலக்கியம் என்கிற மழைக்காட்டில் சதா சர்வகாலமும் கவிதைத் தவம் இருக்கிற, நம் காலத்துக் கவிஞர் வைரமுத்துவின் சற்றே அவசரமான அந்த வேண்டுகோளால் புறப்பாட்டை வேகப்படுத்தினேன். 

என் மனவேகத்துக்கு ஈடுகொடுத்து நகர்ந்த பல்லவன் பேருந்து, 9.30 மணிக்கெல்லாம் கோடம்பாக்கத்து வெள்ளை மாளிகையில் என்னைக் கொண்டுபோய்விட்டது. அதுதான் கவிப்பேரரசின் வாசஸ்தலம்! மாளிகைக்குள் செல்வதற்கான வாசலும் அலுவலக நுழைவாயிலும் இரு வேறு திசைகளில் அமைந்திருக்கிறது போலும்! கவிஞரின் உதவியாளர்களான இளைஞர்கள் இருவர் என்னை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்கள். அந்தக் கட்டடத்தைப் பார்த்த மாத்திரத்தில் அமெரிக்க அதிபர்கள் தமது ஆட்சிக் காலம் வரையில் கொலைவெறியோடு அலைந்த, அலைந்துகொண்டிருக்கும் வெள்ளை மாளிகையை நினைவுபடுத்தினாலும், உள் நுழைந்ததும் சாண்டில்யன் நாவல்களில் கம்பீரம் காட்டிய அரண்மனைகளிலில் ஒன்று, என் மனக்கண்ணில் ஒளி பதித்து ஓவியமானது. வாயிலைத் திறந்ததும் கீழ்நோக்கி ஓடிய ஐந்தாறு படிக்கட்டுகள்… தரை மட்டத்தில் என்னைத் தரிக்க வைத்து வியப்பூட்டின. தமிழ் நாட்டிற்கே பஞ்சமான சுத்தம் அங்குதான் கொட்டிக் கிடந்தது. நாற்காலிகள் உள்ளிட்ட தளபாடங்கள் நவீனமும் மிடுக்கும் கலந்து காட்சியளித்தாலும், ஏனோ நான் சாண்டில்யனின் புராதன அரண்மனைகளுக்குள் தான் ஓடியோடி வெளிவந்துகொண்டிருந்தேன். ஒரு சுற்று முடிப்பதற்குள்ளாகவே மெல்லிய சத்தத்துடன் அகலத் திறந்தது எனக்கு முன்னிருந்த அகன்ற கதவு.

வெள்ளையல்லாத வேறு வண்ண உடையில் கவிப்பேரரசை யாரும் தமிழ்நாட்டில் கண்டிருக்க மாட்டார்கள் என்பதால் மட்டுமன்றி, அவர் என்ன வண்ணத்தில் உடையணிந்தால் எமக்கென்ன என்பதாலும் அதுபற்றி இங்கு குறிப்பிட எண்ணவில்லை. எனினும், அதைத் தவிர்க்க முடியவில்லை இங்கு! 
கவிஞர் தோன்றிய காட்சியிலிருந்து, மண்ணின் நிறத்து மரச் சுவர்களின் பின்னணியில் வெள்ளை நிறத்துக்கு அழகு அதிகம் என்று அன்று கண்டேன். அதிலும் வானிஷ் அடிக்கப்பட்ட, அந்த மரச் சுவர்களுடன் கவியரசு பிரவேசிப்பதற்கு முன்னரே நட்புறவாடியிருந்தேன்.

வணக்கம் சொன்னவாறு படிக்கட்டுகளில் இறங்கி, அவர் தரைதொட்ட தோரணை, என்னை மீண்டும் சாண்டில்யனின் அரண்மனைக்குள் தள்ளிவிடப் பார்த்தது. நல்லவேளை, அந்த நட்புச் சுவர்களே என்னை நடப்புலகில் நிலைத்திருக்க உதவின. 

நேரம் சரியாக 9.45 மணி. கலைஞர்களும் கவிஞர்களும் கவனிக்கவேண்டிய விடயம் இது! 15 நிமிடம் முன்னதாகச் சென்றதால், எனது அடுத்த நகர்வுக்குத் தேவையான பொருட்களைச் சரிபார்க்கவும் தேநீர் உபசரணையை ஏற்றுக்கொள்ள அவகாசமும் இருந்தது. எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட்டதால்தான் மரச் சுவர்களின் அழகில் மயங்கயிருந்தேன். அன்றும் எனக்கு 12.30 மணிக்குப் பரீட்சைதான்! பேட்டியை முடித்துவிட்டு அங்கிருந்தே பரீட்சைக்குச் செல்வதாய் திட்டம். 

கவிஞருக்;குப் பதில் வணக்கம் சொன்ன என் கைகள், பேட்டிக்காகக் குறித்துவந்த கேள்வித் தாளைத் தேடியது. காணவில்லை. எனக்கு அதிகபட்சமாக ஒதுக்கப்பட்டிருந்த, குறைந்தபட்ச நேரமான 20 நிமிடங்களில், பையைத் துளாவியே இரண்டு நிமிடங்களைக் கழித்தேன். சக்.. சக்.. என்று பையிலிருந்த எல்லா ~pப்புகளையும் திறந்து பார்;த்தாயிற்று. ம்ஹ_ம்..!

“எதையாவது தவறவிட்டுவிட்டீர்களா?” என்றார். “ஆம் கேள்விகளை… ஆனால் பேட்டியை ஆரம்பிக்கலாம்” என்றபடி ரெக்கோடரை இயக்கினேன். மீடியாக்களிலும் மேடைகளிலும் கவிதைகளை முழங்கிய கவிஞரின் கணீர்க் குரல், இயல்புக்கு இறங்கி வந்து பதிலளித்தபோது, தன் இரு மருங்கிலும் பசும் புற்களை வளர்த்துக்கொண்டே சலனமற்றுப் பாயும்  ஒரு நதியின் பிரவாகம் கண்டேன். 

“கவிதை தொழிலாகவேண்டும்;, அதாவது கவிதை எனக்குத் தொழில் என்கிற நிலை கவிஞர்களுக்கு உருவாகவேண்டும்” என்கிற அவருடைய ஆதங்கம் பதிவானது. அரசவைக் கவிஞர்களாக இருந்தவர்கள் பட்டியலிடப்பட்டார்கள். தற்காலப் பெண் கவிஞர்கள் புகழப்பட்டார்கள். கண்ணதாசன் இல்லையேல் தான் இல்லை என்று உள்ளம் ஒப்பினார்.

எந்தவொரு தரப்போடும் முரண்டுபிடிக்காத சமரசத்துடன், ஆனால் சுவாரஸ்யம் மிகுதிப்பட தொடர்ந்த அந்த உரையாடல், முடிவுக்கு வந்தபோது, நேரம் சரியாக 10.53 மணி. வழமையான எனது கடைசிக் கேள்வி: “பேட்டி திருப்தியாக இருக்கிறதா?”. “நிச்சயமாக… உண்மைகளை வலிக்காமல் வாங்கிவிட்டீர்கள்” என்றார். “கொஞ்சம் தேநீர் நிறைய வானம்” என்ற கவிதை நூலில் கையெழுத்திட்டு வழங்கினார்.

வாசனைத் தமிழை வாசித்து வாசித்து அவன் 
தன்னை வசப்படுத்திக்கொண்டான். 
தாங்கள் வசிப்பதற்குத் தக்க நிலம் இவனென்று
வார்த்தைகள் அவனுக்குள் வசிக்கத் தொடங்கின! 

என்கிற  கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள இடம் குறித்து விளக்குக. அன்று நடந்த பரீட்சையில் இப்படியொரு கேள்வி!

நூல்: கவிராஜன் கதை 
ஆசிரியர்: வைரமுத்து
விளக்கம்: தமிழை தன்வசப்படுத்தி வைத்துக்கொண்டு கவிதை முழக்கமிட்ட புரட்சிக் கவிஞன் பாரதியை ‘கவிராஜன்’ என்று குறிப்பிட்டு, அவருடைய ஆளுமையை எடுத்தியம்ப, தமிழைத் தனக்குள் செழிக்கவைத்துக் கோலோச்சும் கவிப்பேரரசு வைரமுத்துவால் எழுதப்பட்ட “கவிராஜன் கதை” என்கிற நூலில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன என்று அன்று பதில் எழுதினேன்.

2005 ஆம் ஆண்டில் நான் பெரிதும் மதித்துப் பேட்டிகண்ட கவிப்பேரரசரின் அன்றைய ஆதங்கம், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசுக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசவைக் கவிஞர்களின் பட்டியலில் அவரும் இடம்பெற்றார். ஆனால் நிலைத்திருக்கவேண்டிய பெருமளவு வாசகர்ஃரசிகர்களின் மனதிலிருந்து நீக்கப்பட்டார். கொடுங்கோலை செங்கோலென்று புகழ்ந்து தள்ளிய இடங்களில், தமிழ் மொழியே அவருடன் முரண்டு பிடித்திருக்கக்கூடும்! சாண்டில்யனின் பழைய அரண்மனைகளில், என்னால் உருவாக்கப்பட்ட புதிய கதாபாத்திரம் இவர்!

No comments: